'அது எனது குரலே அல்ல'.. அபார்ஷன் ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 22, 2018 09:27 PM
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாட்ஸ் அப்பில் வலம்வந்த ஆடியோ தன்னுடையது அல்ல என விளக்கம் அளித்திருக்கிறார்.
நேற்று வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் உதவி கேட்டு வந்த பெண்ணை இப்படி கர்ப்பமாக்கி விட்டீர்களே என பெண் ஒருவர் கேட்பது போலவும், பதிலுக்கு ஆண் ஒருவர் உரையாடுவது போலவும் இருந்தது. அதில் எந்த இடத்திலும் தமிழக அமைச்சர் என்றோ,ஜெயக்குமார் என்றோ கூறப்படவில்லை.
எனினும் ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமார் குரல் போல இருப்பதால்,பெரும் பரபரப்பை உண்டாக்கியது.அதனுடன் மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் ஒன்றும் அதில் ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது போன்றும், அதில் தந்தை என்ற இடத்தில் ஜெயக்குமார் பெயரும், தாய் என்கிற இடத்தில் ஒரு பெண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்ததால் இந்த ஆடியோ வைரலாகியது.
இந்தநிலையில் அந்த ஆடியோ தன்னுடையது அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில்,''அந்தக் கும்பல் கடுமையாக என்னை எதிர்ப்பதற்காக என் மீது அரசியல் காழ்புணர்ச்சியோடு ஒரு நட்சத்திர விடுதியில் நான் யாருடனோ இருப்பது போன்று மார்பிங் செய்து வாட்ஸ் அப், பேஸ்புக்கில் உலாவ விட்டனர். இது எனது கவனத்திற்கு வந்து சைபர் கிரைமில் புகார் அளித்து மூன்று பேரைக் கைது செய்து சிறையிலடைத்தோம்.
இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்திற்கு முன் பதில் சொல்ல வேண்டியவர்கள். சட்டப்படி அதனை எதிர்க்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். டி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன் தான் இருக்கிறேனா? இது தொடர்பான அனைத்து விதமான பரிசோதனைகளுக்கும் நான் தயார்,'' என தெரிவித்துள்ளார்.