கஷ்டப்பட்டு சம்பாதித்த 12 லட்ச ரூபாயை குப்பைத்தொட்டியில் நபர் ஒருவர் தூக்கிப்போட்ட சம்பவம், சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சீனாவின் லியோனிங் பகுதியை சேர்ந்த வாங் என்னும் நபர், தனது வீட்டை விட்டு வெளியே வரும்போது 2 பிளாஸ்டிக் பைகளைக் கொண்டுவந்தார்.
ஒன்றில் தேவையில்லாத குப்பைகளும், மற்றொன்றில் அவர் உழைத்து சம்பாதித்த 12 லட்ச ரூபாயும் இருந்தன. ஒரு பையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு மற்றொரு பையுடன் வங்கியை அடைந்த வாங், அங்கு அந்த பையைத் திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் அந்த பை முழுவதும் குப்பைகள் இருந்தன. தனது தவறினை உணர்ந்த வாங் விரைந்து அந்த குப்பைத்தொட்டியை அடைந்து, அங்கு தனது பணம் அடங்கிய பையைத் தேடினார். ஆனால் அவரது பணப்பை அங்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் வாங் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து குப்பைத்தொட்டியின் அருகிலிருந்த சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு பெண் அந்த பையை எடுத்து செல்வது தெரியவந்தது. ஆனால் காட்சிகள் தெளிவாக இல்லாததால் அந்த பெண் யார்? என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
எனினும் அந்த பகுதியை சுற்றி போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு பெண் தானாகவே முன்வந்து அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் மகிழ்ந்து போன வாங் அந்த பெண்ணுக்கு சன்மானமாக 20 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.