டிக்டொக்: பாடல் வரிக்கு ஏற்ப நடிக்கும்போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 04, 2018 12:08 PM
டிக்-டொக் எனும் செயலி வந்த பிறகு பலரும் நேரத்தை போக்குவதற்கே நேரமில்லாமல் தவிக்கின்றனர். அந்த அளவுக்கு நாளும் பொழுதும் அதில் கிரியேட்டிவாக எதையாவது யோசித்து செய்ய வேண்டி உள்ளதே!
இதுபோன்ற அப்ளிகேஷன்கள், குறிப்பாக ஓய்வற்ற நிலையில் எப்போதும் இருக்கும் வீட்டு பெண்கள், வேலை இல்லாத ஆண்கள், மனதுக்குள் நிறைய உள்வளத் திறமைகள் இருந்தும் கண்டுகொள்ளப்படாதவர்கள், அதிக தாழ்வு மனப்பான்மையும்- அதிக உயர் மனப்பான்மையும் கொண்டவர்களை மிகவும் பாதித்து விடுகின்றன.
அவர்களும் அதில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என செய்யும் சேட்டைகள் பல நேரங்களில் விளையாட்டாகத் தொடங்கி, வினையில் சென்று முடிகின்றன. கள்ளக்காதலால் குழந்தையை கொன்றது முதல், பெண் வேடமிட்டு இந்த ஆப்பில் பாடிய நபர் தன்னை எல்லாரும் கிண்டல் செய்ததால் தற்கொலை செய்துகொண்ட செயல் வரை, பேரிடர், போர், தேசம், குடும்பம் போன்றவற்றினால் உயிரிழந்தவர்களுக்கு நிகராக இதுபோன்ற அப்ளிகேஷன்கள் மூலம் உயிரை விட்டவர்களும் ஏராளம்.
அப்படித்தான் தற்போது ஆகாஷ் என்றொரு இளைஞர் பல விதமான திறமைகளை இந்த ஆப் மூலம் வெளிப்படுத்தி வந்தார். அவர் ஒரு பாடலின் நடுவில் வரும் வரிகளான, ‘ங்கொப்பன் கழுத்துலதான் வெப்பேண்டி நைஃப்’ என்கிற வரியை பாடிக்கொண்டே மியூசிக்கல் டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.
அதற்கு மூவ்மெண்ட் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் பாடல் வரிகளில் வந்ததுபோலவே, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு இந்த பாடலை பாடிக்கொண்டே, தன் கழுத்தில் கத்தியை எதார்த்தமாக வைத்துள்ளார். அந்த கத்தி அவரது கழுத்தை பதம் பார்த்துள்ளது. தன் கழுத்தில் ரத்தம் வருவதை ஓரிரு விநாடிகள் கழித்து உணர்ந்தவர், அவராகவே முன்வந்து தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது விளம்பரத்துக்காக அவரே உருவாக்கிய பொய்யான வீடியோ என்றும் பலர் கூறி வந்தாலும், வீடியோவை பார்த்தவர்களோ அந்த நபரின் செயலை உண்மை என்றும் முட்டாள் தனம் என்றும் கூறி வருகின்றனர்.பெருவாரியான மக்கள் பார்க்கும் செய்தி தளங்களில் அந்த வீடியோவின் காட்சித் தன்மை காரணமாக பதிவிடப்படாமல் உள்ளது என்றாலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது.
அவருக்கு எதுவும் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று நம்பலாம். எனினும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள், இதனால் வரும் வினைகளை முன்கூட்டியே யோசிக்க வேண்டும் என்பதும், மியூசிக்கல்-டிக்டொக் அப்ளிகேஷன்களில் வரும் பாடல்களின் வரிகளை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.