மீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 28, 2018 12:49 PM
கேரளாவை சேர்ந்த ஹனன் என்னும் மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். தனது குடும்பம் மற்றும் படிப்பு போன்ற தேவைகளுக்காக மீன் விற்கும் தொழிலையும் அவர் பகுதி நேரமாக செய்து வருகிறார். இதுகுறித்து அண்மையில் மாத்ரூபூமி என்னும் நாளிதழில் சிறப்புக்கட்டுரை வெளியானது.
இது பலரது பாராட்டைப் பெற்றாலும், ஒருசிலர் இது போலி இந்த செய்தியில் உண்மையில்லை என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தன் பேஸ்புக் பக்கத்தில்,'' கடினமான வாழ்க்கைக்கு எதிராக போராடிவரும் ஹனனை தூற்றுவதை நிறுத்துங்கள்,'' என்று பதிவிட்டு தனது கண்டனத்தினைப் பதிவு செய்தார்.
கேரளாவில் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மாணவியை தவறாக சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உத்தரவையடுத்து வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவரை காவல்துறை நேற்று அதிரடியாகக் கைது செய்தது. தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து நூருதீன் வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனானைக் கிண்டல் செய்தனர். ஹனானிடம் மன்னிப்பு கேட்டு மற்றோரு வீடியோவை நூருதீன் ஷேக் வெளியிட்டார் எனினும்,கைது நடவடிக்கையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.