’மெரினாவில் இடமில்லை’என்றவர்களுக்கு பதில்...திமுக செயற்குழுவில் அன்பழகன் !
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 14, 2018 11:47 AM
தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பேனர்களில் கூட மு.க.ஸ்டாலினின் முகம் பளபளத்தது.
கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியேயும் நிர்வாகிகள் அமர்ந்தனர். அவர்கள் வசதிக்காக எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்பட்டுள்ளன. துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த செயற்குழு கூட்டத்தின் தொடக்கமாக கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது திமுக எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். கருணாநிதி நிகழ்த்திய சாதனைகளை வரிசையாக பட்டியலிட்டார். பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி என்றும், கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி என்றும் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டார்.
மேலும் எம்.எல்.ஏ ஜெ.அன்பழன் பேசும்பொழுது, ’யார் எல்லாம் மெரினாவில் இடம் தரமாட்டோம் என்று சொன்னார்களோ; அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே இடம் இல்லை என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்’ என்று பேசினார். மேலும் ஸ்டாலினைப் பார்த்து பெரியார், அண்ணா, கலைஞராக உங்களை நாங்கள் பார்க்கிறோம் என்று ஜெ,.அன்பழகன் பேசினார்.