மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான தோல்வியிலும்... 'விராட் கோலி' படைத்த சாதனைகள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 18, 2018 12:32 AM
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 14-வது ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், விராட் கோலியின் பெங்களூர் அணியும் நேரடியாக மோதியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைக் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் 94 ரன்களும், லூயிஸ் 65 ரன்களும் குவித்தனர்.
இதைத்தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 167ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் அணி தோல்வியைத் தழுவினாலும், அதன் கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
*ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி தான்.
*பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் கோலி, இதுவரை மொத்தமாக 32 அரைசதங்களை அடித்திருக்கிறார்.
*நடப்பு ஐபிஎல்லில் கோலி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 201 ரன்களைக் குவித்திருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி கைப்பற்றியுள்ளார்.
*இதுதவிர முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களும் 90 ரன்களுக்கும் அதிகமாகக் குவித்தது இந்த போட்டியில் தான் (கோலி-92,ரோஹித் 94).