'பெங்களூர்' பவுலர்களைப் புரட்டி எடுத்த 'மும்பை' பேட்ஸ்மேன்கள்.. கோலி அணிக்கு இலக்கு இதுதான்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 17, 2018 10:14 PM
புகைப்பட உதவி @IPL
மும்பை மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், விராட் கோலியின் பெங்களூர் அணியும் நேரடியாக மோதி வருகின்றன.
டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, வழக்கம் போல பவுலிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணி முதலில் களமிறங்கியது. இதைத்தொடர்ந்து மும்பை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக சூரியக்குமார் யாதவ்வும், எவின் லூயிஸும் களமிறங்கினர்.
உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தில் சூர்யக்குமார் யாதவ் வெளியேற, தொடர்ந்து இஷான் கிஷன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த பந்தில் இஷான் கிஷன் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து 4-வது வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார். எனினும் உமேஷின் ஹாட்ரிக் கனவுக்கு ரோஹித் பலியாகவில்லை. அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும் லூயிஸ், ரோஹித் இருவரும் அடித்து ஆடியதால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக 3-வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 108 ரன்களைக் குவித்தனர்.
42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோரி ஆண்டர்சன் பந்தில் லூயிஸ் தனது விக்கெட்டை டி காக்கிடம் பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ணால் பாண்ட்யா 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரன்-அவுட்டாகி வெளியேறினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 5 ரன்கள் எடுத்திருந்த போது, வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் சடாரென குறைந்தது.
எனினும் 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும், ரோஹித்தும் கடைசி நேரத்தில் அடித்து ஆடியதால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 52 பந்துகளில் 94 ரன்களை எடுத்திருந்த போது ஆண்டர்சன் பந்தில் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும் ஹர்திக்கின் கடைசி நேர அதிரடியால்(17ரன்கள்), நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைக் குவித்தது. இதில் கடைசி ஓவரில் மட்டும் மும்பை அணி 21 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பெங்களூர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.