இந்திய அணியில் இடம்பிடித்த '500 ரூபாய்' வீரர்.. காரணம் யார் தெரியுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 12, 2018 06:53 PM
500 ரூபாய் கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் இளம் வீரர் நவ்தீப் ஷைனி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வாகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் ஷைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நவ்தீப் கூறும்போது, "கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு 250 முதல் 500 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு விளையாடி வந்தேன். கவுதம் கம்பீர் தான் எனது திறமையைக் கண்டறிந்து எனக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். கம்பீர் அன்று எனக்குக் கொடுத்த ஊக்கம் தான் இன்று இந்திய அணியில் நான் இடம்பிடிக்க காரணம்.
என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றியவர் கம்பீர். நான் ஹரியானாவைச் சேர்ந்தவன். ஆனால், டெல்லி அணியில் இடம் பெற வைக்க எனக்குக் கம்பீர்தான் பல்வேறு உதவிகள் செய்தார். எனக்குப் பந்துவீச்சு பயிற்சி அளித்து, அதை அதிகாரிகளை பார்க்கச் செய்து, டெல்லி அணியில் வாய்ப்பு அளிக்கக் காரணமாக அமைந்தார்.
டெல்லி அணிக்குத் தேர்வான பின் நான் விளையாடியதைப் பார்த்த கம்பீர் நீ தொடர்ந்து பயிற்சி செய்தால் இந்திய அணிக்கு நிச்சயம் தேர்வு பெறுவாய் என்றார். அவரின் வார்த்தைகள் இன்று பலித்து விட்டன. இந்திய அணிக்காகத் தேர்வாகி இருக்கிறேன்,'' என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.