தினமும் பத்தாயிரம் பேருக்கு உணவளிக்கும் இந்திய கடற்படை !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 23, 2018 10:46 AM
கேரளாவில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 மாவட்டங்கள் சின்னாபின்னமாகி இருக்கின்றன. சாலைகள் பாலங்கள் என பல பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.சாலை போக்குவரத்து இன்னும் முழுமையாக சீராகவில்லை. கடந்த 2 நாட்களாக படிப்படியாக மழை குறைந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மெதுமெதுவாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் பல பகுதிகளில் வெள்ளமானது இன்னும் முழுமையாக வடியவில்லை.இதனால் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். வீடுகளுக்கு சென்ற மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
வீடுகள் முழுமையாக களிமண்ணால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றது.மேலும் வீடுகளுக்குள் கொடிய விஷமுள்ள ராஜநாகம்,நாகப்பாம்பு மற்றும் கொடிய விஷபூச்சிகள் இருப்பதால் மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்கே மிகவும் அச்சப்படும் சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
இது போன்ற பல காரணங்களால் மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளார்கள்.இதனால் அவர்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்கும் சவாலான பணியை முகாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இதில் இந்திய கடற்படை அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் மகத்தான பணியை கடற்படையை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.பம்பரமாய் சுழன்று மூன்று வேளையும் மக்களுக்கு நேரத்திற்கு உணவளித்து வருகின்றார்கள்.
இதில் நோயாளிகள் மற்றும் குழந்தைகளும் இருப்பதால் அவர்களுக்கு தகுந்தது போன்ற உணவுகளையும் சமைத்து வருகின்றார்கள்.இதற்காகவே பிரத்தியேகமாக சமையல் அறை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து வருகின்றார்கள் நமது கடற்படை வீரர்கள்.