‘ஓவர் ரியாக்ட் பண்ண தேவயில்ல.. சீனியர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்வார்கள்'!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 23, 2019 02:03 PM
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதற்காக மிக அண்மையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மேற்கண்ட இரண்டு இந்திய வீரர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் தேவை என்று கூறியுள்ளார்.
கரண் ஜோஹர் நடத்தும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்னதாக கலந்துகொண்ட பாண்ட்யாவும் ராகுலும் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கியதோடு, பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் கங்குலி உள்ளிட்ட சில வீரர்கள் மட்டுமே பாண்ட்யா, ராகுல் இருவரையும் அணியில் இருந்து நீக்குவது தேவையில்லாதது என்று கூறி ‘சர்ச்சை வீரர்களுக்கு’ ஆதரவளித்தனர்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்த இரண்டு வீரர்களையும் பற்றிய தனது முக்கிய கருத்தினை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘நல்ல கிரிக்கெட் வீரர்களாக கற்றுத் தேர்ந்து உருவாவது என்பது டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் சீனியர்களிடம் இருந்துதான் தொடங்கும். அவர்களைப் பார்த்தே ஜூனியர் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்வார்கள். நான் என் அம்மா, அப்பா, ஆசிரியரிடம் இருந்து சின்னச் சின்ன விஷயங்களைக் கற்றது போல் நமக்கு முன்னோடிகள்தான் நமக்கு முன்மாதிரிகளாகவும் அமைகிறார்கள். ஆகையால் பாண்ட்யா மற்றும் ராகுல் விஷயத்தில் இந்த நடவடிக்கைகள் எடுப்பதும் இந்த பிரச்சனையை பெரிது படுத்துவதும் தேவையில்லாதது’ என அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், ‘எல்லா வீரர்களும் ஒரே விதமான புரிதலுடன் ஒரேவிதமான சூழல் பின்னணியில் இருந்து வருவதில்லை. ஆகையால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை வைத்துக்கொண்டு, மீண்டும் தவறுகள் நிகழாமல் இருக்க அறிவுறுத்தலாம். அவர்களும் தங்கள் பொறுப்பினை உணர்ந்து தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்துவிடாமல் இருக்க உறுதி அளிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.