'8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்'.. கேரளாவுக்கு எச்சரிக்கை!
Home > News Shots > தமிழ்By Jeno | Sep 27, 2018 03:25 PM
வரலாற்றில் இல்லாத அளவிற்கு சமீபத்தில் பெய்த மழையை யாரும் மறந்திருக்க முடியாது.கடும் மழையின் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.தற்போது தான் கேரளா வெள்ள பாதிப்பிலிருந்து தனது பழைய நிலைக்கு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது கேரள மக்களுக்கு கடும் அச்சத்தை அளித்துள்ளது.வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த 8 மாவட்டங்களுக்கும் முதல்கட்டமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை எச்சரிக்கை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து 8 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தயார்நிலையில் இருக்கும்படி கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.