‘அது நான் இல்லை; நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்’: ஸ்பைக் லீ-யின் வைரல் பதில்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 16, 2018 04:27 PM
உலகப் புகழ்பெற்ற ஸ்பைடர் மேன், எக்ஸ்-மேன் சீரிஸ்கள் மற்றும் இன்னும் பிற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தன் எழுத்துக்களால் வடிவமைத்து உருவாக்கியவர் ஸ்டான் லீ. மார்வல் நிறுவனத்தின் எழுத்தாளராக இருந்த இவரது அநேகம் எழுத்துக்கள் திரையில் சூப்பர் ஹீரோக்களின் சாகசங்களாக மிளிர்ந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயற்கை எய்திய இவருக்கு உலக காமிக்ஸ் பிரியர்களும், உலக திரை இயக்குனர்களும், ஹாலிவுட் திரையுலகினரும் தத்தம் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் மீதான பிரியத்தை ரசிகர்களாகவும் வருத்தம் தெரிவித்து வெளிப்படுத்தினர். இந்நிலையில், நியூஸிலந்தின் பிரபல பத்திரிகை ஒன்று ஸ்டான் லீ-யின் இறப்புக்கு அனுதாபங்கள் தெரிவிக்கும் பொருட்டு வெளியிட்ட செய்தியில், ‘ஸ்டான் லீ’ என்பதற்கு பதில் ‘ஸ்பைக் லீ’ என்று அச்சடித்து மேற்கு திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் கருப்பினத்தவர்களை மையமாக வைத்து மால்கோம் எக்ஸ், டு தி ரைட் திங் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்பைக் லீ-யோ, இதனை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு விமர்சனம் செய்துள்ளார்.
அதன்படி, ‘இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ஸ்டான் லீ; நானா இறந்தது? இன்னும் இல்லை. அதோடு நான் இன்னும் வாழ முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்தவர், தனது புகழ்பெற்ற Truth,Ruth என்கிற வசனத்தையும் சேர்த்து உண்மையை பதிவிட்டு அந்த தவறான செய்தியை விமர்சித்திருக்கிறார். இதற்கு பலரும் வித்தியாசமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். நாட்டில் நல்ல சப்-எடிட்டர்களை கண்டடைவது கடினம் என்று ஒருவர் கூறியுள்ளார்.
நம்மூரிலும் கூட, முன்னாள் குடியரசுத்தலைவரும் அமரருமான அப்துல் கலாமின் இறப்பு செய்தியை வெளியிட்ட ஒரு பிரபல பத்திரிகை, ‘அப்துல் காலம்’ என்று தலைப்பெழுத்திலேயே அச்சிட்டிருந்தது. தமிழின் மிக முக்கியமான லீடிங் பொழுதுபோக்கு சேனல் தனது தொடக்க விழா அழைப்பிதழில் அத்தனை பிழைகளைச் செய்திருந்தது. எனினும் பெயர் மாற்றி அச்சிடப்பட்ட செய்திகள் குறைவுதான்.