‘99 % பேர் பணிக்கு திரும்பினர்... மீதமுள்ளவர்கள் இன்றிரவு 7 மணிக்குள் திரும்ப எச்சரிக்கை’.. பள்ளிக்கல்வித்துறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 28, 2019 04:06 PM

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோருவது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

If Teachers return to schools from strike can choose their transfers

ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் கீழ் நடந்துவரும் இந்த போராட்டங்களை பலர் சம்பள உயர்வுக்கான போராட்டம் என்று சித்தரிக்கவும் செய்ததால் போராட்டத்தின் நோக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதை அடுத்து, போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்காமல் மேற்கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாக கருதிய போராட்டக்காரர்கள், இன்னும் போராட்டத்தை வலுப்படுத்தினர். 

இதனிடையே ஆங்காங்கே இருந்த வேலை இல்லா பட்டதாரிகள் பலரும் பள்ளிகளுக்கு தானாகவே சென்று ஆசிரியர்கள் வராததால் தாங்கள் பாடம் எடுக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு திரும்பச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. இதேபோல் பள்ளிக்கல்வித்துறையும் ஆசிரியர்களை உடனடியாக பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று சுற்றறிக்கையும் பொது அறிக்கையும் விட்டது.

ஆனாலும் தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், பள்ளிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்து,  பள்ளிக்கல்வித்துறை ரூ.7,500 சம்பளத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியப் பணிகளை நியமிக்கச் சொல்லி ஆணையிட்டது. அதற்கான விண்ணப்பம் வழங்கும் பணியையும் தொடங்கியது.

ஆனாலும் தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் வலுத்ததோடு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இணைந்ததாலும், அடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் இணையவுள்ளதாலும், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புகள் ஆதரவு தருவதாலும் போராட்டம் மேலும் வலுப்பெற்று வருகிறது.

திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஆசிரியர்கள் அமைப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை சுமுகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதே சமயம், ஆசிரியர்கள் உடனடியாக பள்ளிக்குத் திரும்பினால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என்றும் கூடுதல் சலுகை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எனினும் ஜனவரி 29-ஆம் தேதி 7 மணிக்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நாளையில் இருந்து பள்ளியில் மீண்டும் செல்லவில்லை என்றால் போராட்டக்காரர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என்று தீர்க்கமாகச் சொல்லியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. ஆனாலும் 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

Tags : #JACTOGEO #TNTEACHERSSTRIKE #DSE #TEACHERSPROTEST