‘இனி குடிச்சுட்டு வாகனம் ஓட்டி போலீஸ்கிட்ட சிக்குனா இதுதான் கதி’.. காவல்துறை அதிரடி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 22, 2019 10:45 AM
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸாரிடம் சிக்கினால், அவர்களின் மீது புதிய, அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக ஹைதராபாத் காவல்துறை முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, போக்குவரத்து காவலர்கள் சோதனைக் கருவியை பயன்படுத்தி சோதிப்பது உண்டு. பலரும் இதனை பொருட்படுத்தாமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவே செய்கின்றனர். மீறி மாட்டிக்கொண்டால் அபராதத் தொகையை கட்டிவிட்டு நடையைக் கட்டலாம் என்று நினைக்கின்றனர். இன்னும் பலர் காவல்துறையினர் மதுசோதனைக் கருவியை நோக்கி ஊதிக்காட்டச் சொல்லும்போது ஊழல் செய்துவிடுகின்றனர்.
ஆக, மது அருந்திவிட்டு கட்டுப்பாடின்றி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஹைதரபாத் காவல்துறை ஒரு புதிய உத்தியை யோசித்துள்ளது. அதன்படி, இனி ஹைதராபாத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தப்பித் தவறியேனும் பிடிபட்டால், அவர்கள் பிடிபட்ட இடம், அவர்களின் பெயர், நேரம், பிடிபட்ட தேதி முதலான விபரங்களை, பிடிபட்டவர் பணிபுரியும் அலுவலகத்தின் எச்.ஆர் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்.
அதேசமயம் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை காவல்துறை பயமுறுத்துவது இல்லை என்றும், அவர்களின் ஆபீசுக்கு தகவல் அனுப்பி போட்டுக்கொடுப்பது இல்லை என்றும் கூறிய காவல்துறை, இது ஒருவிதமான விழிப்புணர்வுக்காகவே என்று விளக்கமளித்துள்ளது.