தலைக்கு மேலே ரயில்.. மனைவி-குழந்தையை மீட்ட கணவரின் சமயோஜிதம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 16, 2018 12:58 PM
ரயில் தண்டவாளமும், தடதடக்கும் அதன் சத்தமும் பலருக்கும் பயத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவில் ஹீரோக்கள் பலர் ரயில் கிட்டே நெருங்கும்போது சாமானியமாக, கடைசி நிமிஷத்தில் ரயிலைக் கடப்பதும், பிறரை காப்பாற்றுவதும் இயல்பான காட்சிகளாக பார்க்க முடியும். ஆனால் லண்டனில் சமீபத்தில் நடந்துள்ள அபாயகரமான விஷயம் பலரையும் சற்று நேரம் பதட்டத்தின் உச்சத்தில் நிறுத்தி வைத்தது.
லண்டனில் உள்ள பேக்கர்ஸ் ஸ்ட்ரீட் டியூப் ரயில் நிலையத்திற்கு கூட்ட எண்ணிக்கை வெகுவாகவே இருக்கும். இங்கு ஒரு பெண்மணி தன் குழந்தையை குழந்தைகள் வீல் சேரில் வைத்தபடி தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அவருக்கு சற்று பின்னால் அவரது கணவர் இயல்பாக நடந்து வந்துகொண்டிருந்தார்.
பெண்மணியோ நடந்து சென்றுகொண்டே, பிளாட்பாரத்தில் ரயில் நிற்பதை பற்றிய அறிவுப்பு போர்டையே பார்த்துக்கொண்டு கவனமின்றி செல்ல, எதிர்பாராத விதமாக குழந்தை வீல் சேரில் இருந்து தவறி விழ, குழந்தையை காப்பாற்ற தாயும் தவறி விழுந்தார். இதனை பார்த்து பதறிப்போன, கணவர் சட்டென ஓடி, தண்டவாளத்தில் இறங்கி குழந்தையைதும் தாயையும் மீட்டெடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த நேரத்தில் ஒரு பயணிகள் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அதைப் பார்த்ததும் குழந்தையின் தாய்க்கு உயிரே போய்விட்டது போல் இருந்துள்ளது. ஆனால் அந்த பெண்மணியின் கணவரோ, பதட்டமடையாமல் சமயோஜிதமாக யோசித்துள்ளார்.
ரயில் இவ்வளவு நெருங்கி வந்துவிட்டதால், இனி குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு வெளியேறுவது கடினம். நிச்சயம் அசம்பாவிதமாக விபத்து ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து உண்டாக நேரிடும் என கண்ணிமைக்கும் நேரத்தில் கணக்கிட்டவர், கணக் கச்சிதமாக குழந்தை, மனைவியுடன் தானும் சேர்ந்து, தண்டவாளத்தின் தரைதளத்தில் உடலை வைத்து ஒட்டியபடி மனைவி, குழந்தையை கைகளால் அமுக்கிப் படித்தபடி படுத்துக்கொண்டார்.
இப்போது ரயில் இவர்களுக்கு மேலே தடதடத்துச் சென்றது. அந்த கொஞ்ச நேரம் சற்று அசைந்திருந்தால்கூட, உயிர் பிழைத்திருப்பது கடினம் என்கிற சூழலில், ரயில் சென்றதும், மூவரும் முழுமையாய் மீட்கப்பட்டனர். இதன் பின்னர் பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ், இவர்களை மருத்துவ பரிசோதனை செய்ததோடு, விபத்து உண்டானதற்கான காரணத்தை விவாதித்தது. கடைசி நிமிஷத்தில் சமயோஜிதமாக செயல்பட்ட கணவரை பாராட்டியது.