'21 ஆயிரம் கோடியா? 2 ஆயிரத்து 100 கோடியா'.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 28, 2019 10:56 AM
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த மோடி, அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு அங்கு உரையாற்றினார்.
தமிழக மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பயன்படும் என்று கூறியிருந்ததோடு, அடுத்து மதுரை- சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்றும், அதிவிரைவு டி-18 ரயில்கள் விரைவில் நாடு முழுவதும் இயக்கப்படும் என்றும், தூத்துக்குடி துறைமுகம் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றும் கூறினார். தமிழகத்தில் மதுரை உட்பட 10 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், மேக் இன் இந்தியா திட்டத்தில் தமிழகம் மிக சிறந்த பங்கு வகிப்பதாகவும் பேசிய மோடி, உற்பத்தி துறையில் தமிழகம் தன்னிறைவு பெற்று திகழ்வதாகவும் அவர் பேசினார்.
முன்னதாக 3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று கூறிய பிரதமர், தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் வறிய நிலையில் இருக்கும் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டவர்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று கூறினார். மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில சுயநல சக்திகள் எதிர்மறை கருத்துகளை மக்களிடம் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அனைவரும் சமூகத்தில் சமவாய்ப்பு பெறவே 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை தவறாக சித்தரிக்க முயல்வது சரியல்ல என்றும் இத்தகைய கருத்துக்களை பரப்புபவர்களிடம் இருந்து இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, தனுஷ்கோடி- ராமேஸ்வரம்-பாம்பன் இணைப்புப் பாலம் ரூ. 2,100 கோடி (டிவெண்டி ஒன் ஹன்ரடு) செலவில் உருவாக்கப்படும் என்று கூறினார். இப்படி மோடி பேச பேச அதனை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த தமிழக பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மேற்கூறிய பாம்பன் இணைப்புப் பாலம் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது என்று சொல்வதற்கு பதில் 21 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவிருப்பதாக கூறி தவறாக மொழிபெயர்த்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.