WATCH VIDEO:'நக்கீரன் கோபாலை' சிறைக்கு அனுப்ப முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 09, 2018 04:56 PM
நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை எழுதியதால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கைது சம்பவத்துக்கு பத்திரிகையாளர்கள்,பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கோபால் மீது 124-ஏ ஐ.பி.சி. (ராஜதுரோக குற்றம்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது தரப்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
ஊடகத்தரப்பில் இருந்து இந்து என்.ராம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி,'' 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும்,'' வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,''நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப இயலாது.124-ம் பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது,'' என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சற்றுமுன் அளித்த பேட்டியில்,'' நீதிமன்றம் கருத்து சுதந்திரம் பக்கம் இருந்ததால் நான் விடுதலை ஆகியுள்ளேன். எனக்கு பக்கபலமாக இருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி. அண்ணன்கள் வைகோ, திருமா, முத்தரசன், இந்து என்.ராம், ஸ்டாலின், பொன்முடி, துரைமுருகன் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார்.
#NakkeeranGopal #Nakkheeran walking out from the court freely after court refused to remand him! @sumanthraman @RKRadhakrishn pic.twitter.com/g39fkXe8R2
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) October 9, 2018