’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 05, 2018 04:58 PM
மழைக்காலம் என்றால் நம்மூர் சாலைகளில் மட்டுமல்ல, சில சமயம் பேருந்துகளில் செல்பவர்களும் குடை எடுத்துச் செல்லுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிற நிலையில் உள்ளன சில பேருந்துகள். குறிப்பாக அரசுப்பேருந்துகள் பெரும்பாலும் மழை பொழியும்பொழுது ஒழுகும் நிலையில் இருக்கவே செய்கின்றன.
எனினும் பயணிகளை விடவும், இத்தகைய நிலையில் பேருந்துகள் இருந்தால் ஓட்டுநர்களுக்குத்தான் மிகுந்த சிரமம் இருக்கிறது என்பதை அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். மழையில் அரசு பேருந்துகளின் மோசமான நிலை பற்றி திண்டுக்கல்-பழனி கிளை அரசு பேருந்து டிரைவர் பேருந்தில் இருந்தபடி சொல்லும் ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், ’4 மணி நேரம் பேருந்தினை இயக்கி வரும் நான் பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டுவிட்டேன். ஆனால் பக்கவாட்டில் மழைச்சாரல் அடித்து உடலும் உடையும் நனைந்து போய் இருக்கிறது. எனக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது?’ என்று கேட்டவர், இதே போன்ற நிலைகளில் இருக்கும் பேருந்துகள் கவனிப்பாரற்று கிடப்பதாகவும் அவையே தினமும் ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் கூறுகிறார். மேலும் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.