போராட்ட எதிரொலி: ‘வகுப்பறைகளை திறந்து வைத்து பாடம் நடத்தும் இளைஞர்கள்!’
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Jan 23, 2019 02:45 PM
தமிழ்நாட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் சார்பில் நிகழ்ந்துவரும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வலுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தச் சொல்லியும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் சென்ட்ரல் போர்டு பள்ளி ஆசியர்களுக்கு இணையான சம்பள உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை களைத்து பழைய திட்டத்தையே திரும்ப கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும், சத்துணவு ஊழியர்களும் போராடி வருகின்றனர்.
இதனிடையே ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அந்த சங்க கூட்டமைப்புகளின் பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இதேபோல் போராட்ட காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் செல்லாததால், அந்த அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை எந்த தனியார் பள்ளிகளும் அனுப்பக் கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வித்யா, சபரிநாதன் என்கிற இரண்டு பட்டதாரிகள், வகுப்பறையை திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். இதெபோல் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் பெரும் நடிகர்களின் ரசிகர்கள், நற்பணி மன்ற ஆர்வலர்கள் என பலரும் பள்ளிகளில் பாடம் நடத்துவதற்காக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளை தற்காலிகமாக களமிறக்கினர்.