அடுத்த 48 மணி நேரத்திற்கு பாதிக்கப்படப்போகும் இணையதள சேவை!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 12, 2018 01:26 PM
இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது டொமைன் சர்வர்கள். இதன் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதள சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.அதில் ''உலக அளவில் இணையதளம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையை பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படலாம். இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த பழுதுபார்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளது. இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து இணையதளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் நடப்பதால் cryptographic key மாற்றம் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த பராமரிப்பு செயல் குறித்து தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சிஆர்ஏ, ‘இந்த பராமரிப்பு பணி என்பது உலக அளவில் இணையத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த பராமரிப்புப் பணி மூலம், உலக அளவில் பல பயனர்களின், இணையதள சேவை முடங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பயனர்களுக்கு, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள்,சேவை முடக்கம் குறித்து முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும்’ என்று அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது.