சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த நீதிராஜா என்பவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பட்டறைக்குத் தேவையான, ஆக்சிஜன் சிலிண்டர்கள் பட்டறைக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், பட்டறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்று காலை சிலிண்டரை இயக்க முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வால்வு திறந்து பெருத்த சப்தத்துடன் சுமார் 70 அடி தூரம் ராக்கெட் போல பறந்து சென்று, அருகிலிருந்த வீட்டின் முன்பகுதியைத் தாக்கியது.
இதில் அந்த வீட்டின் ஜன்னல் மற்றும் சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்தது. மேலும் மற்றொரு வீட்டின் படிக்கட்டுகளும் சேதமடைந்தன. இதுதவிர அருகிலிருந்த மற்றொரு சிலிண்டரில் இருந்தும் கேஸ் கசிய ஆரம்பித்தது.
தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கேஸ் கசிந்த சிலிண்டரை சரி செய்தனர். இதுதவிர விபத்து ஏற்படுத்திய சிலிண்டரையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
ராக்கெட் வேகத்தில் சிலிண்டர் பறந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.