ரத்தத்திலும் கலப்படம்:'எச்.ஐ.வி சோதனை செய்யாமல் ஆயிரம் பேருக்கு விற்பனை செய்த கொடூரம்'!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 27, 2018 02:49 PM
ரத்தத்தில் குளுகோஸ் தண்ணீரை கலந்து கலப்பட ரத்தம் தயார் செய்து விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்த குமபல் கடந்த ஆறு மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் முகமது நசீம் என்பவர் ராகவேந்திர சிங் என்ற லேப் டெக்னிசியனுடன் கடந்த ஆறு மாதங்களாக போலியான ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அவசர தேவைக்கு பணம் தேவைப்படும் மக்கள் மற்றும் போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் ,500 ரூபாய் பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர்.அவ்வாறு எடுக்கப்பட்ட ரத்தத்துடன் குளுகோஸ் தண்ணீரை சேர்த்து இரண்டு யூனிட்டாக மாற்றியுள்ளனர்.இதனை ரத்தம் தேவைப்படுவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தை எச்.ஐ.வி உள்ளிட்ட எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் அப்படியே விற்பனை செய்துள்ளனர்.அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர்.அனைத்தும் கச்சிதமாக இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக கலப்பட ரத்தம் மூலம் நல்ல லாபம் பார்த்தது இந்த கும்பல்.இந்நிலையில் இவர்கள் விற்பனை செய்த ரத்தம் அதிக தண்ணீருடன் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவமனை ஒன்று இதுபற்றி ஆய்வு செய்தது.அப்போது தான் அது கலப்பட ரத்தம் என்பதை கண்டுபிடித்தார்கள்.இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து கலப்பட கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது நசீம் உட்பட்ட கும்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.