’ஒருத்தரும் வர்லே’.. ஈரோடு வெள்ளத்தால் மூழ்கிய 200 வீடுகள்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 16, 2018 12:47 PM
ஈரோடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பவானி அணையை ஒட்டிய கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் ஏறக்குறைய 200 வீடுகளுக்கும் மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கனமழை காரணமாக, நீர்திறப்பு 31,500 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளதை அடுத்து,பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 116.75 அடி, நீர்இருப்பு 30.11 டிஎம்சியாக உள்ளது.
இதனால் கொடுமுடி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள், சத்திரங்களிலும் திருமண மண்டபங்களிலும், கோயில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காவிரி ஆற்றில் பெருகிய நீர்வரத்து காரணமாக 1.40 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், தற்போதே ஒரு சிலர் கண்டுகொள்கின்றனர் என்றும், ஒரே ஒரு நாள் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் அடுத்தடுத்த நாட்களில் உணவு, வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் கைக் குழந்தைகள், வளரிளம் பெண்களை வைத்துக்கொண்டு சிரமப்படுவதாக ஊடகங்களில் கூறியுள்ளனர்.