சென்னைவாசிகளுக்கு ஓர் நற்செய்தி.. மழை-வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 19, 2018 02:59 PM
flood alert organization started in chennai

டிசம்பர் நெருங்க, நெருங்க வெள்ளம் குறித்த அச்சம் மக்களை தொற்றி கொண்டுள்ளது.சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை 5 நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய பேரிடர் மேலாண்மையும் இணைந்து சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளது.

 

இதுகுறித்து  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ''சென்னையில் சிறிதளவு மழை பெய்தால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கிறது.இது கடந்த காலங்களில் மூலம் நமக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.இதனை கருத்தில் கொண்டு வெள்ள பாதிப்புகளை 5 நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும், தேசிய பேரிடர் மேலாண்மையும் இணைந்து சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

 

இது தொழிற்நுட்பம் சார்ந்த அமைப்பு. இந்தத் தொழில்நுட்பத்தை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய தொழில்நுட்ப மையம் சென்னை, இந்திய தொழில்நுட்ப மையம் மும்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் கூட்டாக வடிமமைத்தது.மேற்படி அமைப்பு சென்னையில் ஏற்படக்கூடிய வெள்ள அபாய நிலையினை, மழை அளவு, கடல் அலையின் வேகம், ஆறுகள் மற்றும் நீர்தேக்க நீரின் அளவு, மற்றும் இன்னும் பிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் நீர் இயக்க விசை சார்ந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் கணிக்கும்.

 

5 நாட்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமல்லாமல், எங்கு எவ்வளவு நீர் தேங்கும், அதனால் என்ன பிரச்சினை உருவாகும், என்ன நிவாரணம் மேற்கொள்ள வேண்டும், மீட்பு நடவடிக்கை என்ன மேற்கொள்வது என்பது குறித்து இவ்வமைப்பு 100 சதவீதம் முழுமையாகப் பயன்படும்.

 

நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்னரே வடகிழக்கு பருவமழை வர உள்ளது. ஆகவே, சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புடன் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வமைப்பின் மூலம் பெறப்படும் முன்னெச்சரிக்கை தகவல்கள் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலம் வழங்கப்படும்,''என அமைச்சர் தெரிவித்தார்.

Tags : #TNFLOOD #CHENNAI FLOOD