"வரன் தேடும் ஆண்களை குறிவைத்து ஏமாற்றிய கும்பல்":அவர்கள் பாணியிலேயே மோசடி கும்பலை பிடித்த சென்னை காவல்துறை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 03, 2018 11:43 AM
Family involved in Matrimonial cheating activities caught by Police

திருமணத்திற்காக மேட்ரிமோனியலில் வரன் தேடும் ஆண்களை,ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சென்னை வடபழனி காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

 

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுகிறார்.இவருக்கு வயது 42.இவரின் குடும்பத்தார்  காளிசரணுக்கு நீண்ட நாட்களாக பெண் பார்த்து வந்தார்கள்.சரியாக எதுவும் அமையாததால் மேட்ரிமோனியலில் பதிவு செய்து அதன் மூலம் தேடி வந்தார்கள்.

 

இந்நிலையில் காளிசரணுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பிரியா என்ற பெண், தான் கர்நாடகாவில் வசிப்பதாகவும் `உங்களின் ஜாதகம், முழுத் தகவல்களை எல்லாம் பார்த்தேன். உங்களின் புகைப்படத்தையும் பார்த்தேன்.எனக்கு உங்களை பிடித்துள்ளது. இதனால் உங்களை நேரில் சந்தித்து மேற்கொண்டு பேசவேண்டும் எனவும் நான் சென்னை வந்ததும் உங்களை வந்து சந்திப்பதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு பிறகு காளிசரணை தொடர்பு கொண்ட அந்த பெண்,தான் சென்னைக்கு வர இருப்பதாகவும்    எனவே வடபழனியிலுள்ள வணிக வளாகத்தில் நாம் சந்திக்கலாம் என அவரை அழைத்துள்ளார்.காளிசரணும் பெண்ணை பார்க்கும் ஆவலில் வணிக வளாகத்திற்கு சென்றார்.அப்போது அவரை வரவேற்ற பிரியா சகஜமாக பேசியுள்ளார்.அவரின் சம்பளம் மற்றும் குடும்ப நிலவரம் என அனைத்தையும் விசாரித்துள்ளார்.அதன் பிறகு இங்கு தான் என்னுடைய உறவினர் வீடு இருக்கிறது அங்கு செல்லலாம் எனக்  கூறி காளிசரணை அழைத்து கொண்டு அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ளார்.

 

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற இருவரும்,அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது திடீரென அங்கு புகுந்த இருவர் தாங்கள் இருவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் எனவும்,உன் மீது புகார் வந்துள்ளது எனக் கூறி காளிசரணை மிரட்டியுள்ளார்கள்.மேலும் அவரிடமிருந்த விலையுர்ந்த மொபைல் போன்,தங்க நகைகள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை பறித்து கொண்டு காளிசரணை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி விட்டது.

 

அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது குறித்து உணர்ந்த காளிசரண் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் வெளியே வந்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.உடனே களத்தில் இறங்கிய காவல்துறையினர்,காளிசரண் தெரிவித்த தகவலின்படி,முதலில் அவரிடம் பேசிய செல்போன் நம்பரைக் கொண்டு அவர்களின் விவரங்களை சேகரித்தார்கள். தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்கள். மேலும் காளிசரண், தன்னிடம் பேசிய பெண், மலையாளம் கலந்த தமிழில் பேசினார் என்று தெரிவித்தார். இதனால் காளிசரணைத் தாக்கி செல்போன், நகைகளைப் பறித்தது கேரளாவைச் சேர்ந்த கும்பல் என்று தெரியவந்தது.

 

இதனால் திருமண வரன் என்ற போர்வையில் ஏமாற்றும் கும்பல் குறித்த தகவல்களைச் சேகரித்த காவல்துறையினர், அப்போது கோவையில் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் காளிசரணிடம் கைவரிசையைக் காட்டியவர்களும் ஒரே கும்பல் என்று காவல்துறையினர் கண்டறிந்தார்கள். இதனால், அவர்களைப் பிடிக்க வியூகம் அமைத்து,சம்பந்தப்பட்ட கும்பலிடம் அவர்கள் பாணியிலேயே வரன் பார்க்க வருகிறோம் என்று கூறினார்கள்.காவல்துறையினர் கூறியதை நம்பிய அந்த கும்பல் சென்னை வந்தது.அப்போது அவர்களைப் கையும் களவுமாக பிடித்திருக்கிறது சென்னை காவல்துறை.

 

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஐ.பி.எஸ் கூறுகையில் "கேரளா, கொச்சியைச் சேர்ந்த சாவித்திரி மற்றும் அவரின் மகன் சிவா, சாவித்திரியின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேர்தான் காளிசரணை ஏமாற்றி நகைகள், செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். சாவித்திரிதான் காளிசரணிடம் போனில் பேசியுள்ளார். தாய், மகன்கள் என 3 பேரும் சேர்ந்துதான் காளிசரணைப் போல பலரை ஏமாற்றியுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடம் விசாரித்தபோது தனியார் திருமணத் தகவல் இணையதளங்களில் மணப்பெண் தேவை என்று பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரிப்போம்.

 

பிறகு அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ளோம். பேசும்போதே அவர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரித்துவிடுவோம். பெரும்பாலும் நீண்ட காலமாக திருமணமாகாத வாலிபர்களை குறி வைத்து ஏமாற்றுவோம். எங்களால் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் புகார் கொடுப்பதில்லை. இதனால் தொடர்ந்து பலரை ஏமாற்றிவந்துள்ளோம். ஆன் லைனில் பார்த்து விவரங்களைச் சேகரித்து ஏமாற்றுவதே எங்களின் வேலை என்று கூறியுள்ளனர். இதனால் இவர்கள் 3 பேரைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்று விசாரித்துவருகிறோம்" என்றார்.

 

மோசடி கும்பலைக் குடும்பமாகப் பிடித்த இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீஸாரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெகுவாக பாராட்டினார்.

Tags : #POLICE #CHENNAI CITY POLICE