ஐபிஎல் போட்டியைக் காண கூடுதல் ரயில்கள் இயக்கம்!
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 07, 2018 11:25 PM
11-வது ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது. நடைபெறும் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம், ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே கூடுதல் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்க ஏதுவாக இந்த மாதம் 10, 20, 28, 30, மே 1 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
இந்த தினங்களில், இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை சந்திப்பிலிருந்து புறப்படும் ரயில், இரவு 11.55 மணிக்கு சேப்பாக்கத்தையும் நள்ளிரவு 12.30 மணியளவில் வேளச்சேரியையும் வந்து சேரும்.
பின்னர், வேளச்சேரியில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை 1.03 மணிக்கு சேப்பாக்கத்தையும், அதிகாலை 1.20 மணிக்கு சென்னை கடற்கரை சந்திப்பையும் வந்து சேரும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.