காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை.. வெள்ளத்திலும் யானையை மீட்ட மக்கள் ! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 14, 2018 02:42 PM
கேரளாவில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்து வருகிறது.இதனால் கேரளாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் 11 மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 40 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையிலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானையை மீட்க அணையின் மதகுகளை மூடி யானையை மீட்டுள்ளனர் கேரள மக்கள்.
திருச்சூர் மாவட்டம், அதிரம் பள்ளி அருகே சாலக்குடி ஆறு செல்கிறது, இந்த ஆற்றுக்கு நீர்வரத்து பெருங்களக்கூத்து அணையில் இருந்து வருகிறது. இந்த அணை மொத்தக் கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை, சாலக்குடிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது, ஆற்றின் நடுவே பாறைகளுக்கு இடையே காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக நின்று இருந்தது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்களும், காட்டில் வசிக்கும் பழங்குடியினரும், யானை குளிப்பதற்கும், தண்ணீர் குடிக்கவும் வந்திருக்கிறது என்று நினைத்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும், யானை அதே இடத்தில் நின்று இருந்ததால், ஆற்றைக் கடக்க முடியாமல் திணறுகிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கிராம மக்களும், பழங்குடியினரும், மின்வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மற்ற யானைகள் ஆற்றைக் கடந்துவிட்ட நிலையில், ஒரு யானை மட்டும் காட்டாற்றில் சிக்கி இருக்கிறது. இந்த யானை ஆற்றைக் கடக்கவேண்டுமானால், அணையைச் சிறிதுநேரம் மூட வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையும், யானையும் கடக்க முடியும் என்றனர். ஆனால், முதலில் மறுத்த அதிகாரிகள், அதன்பின் யானையின் நிலையைப் பார்த்து, அணையின் மதகுகளை ஒரு மணிநேரம் மூடினர். ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர், அரை மணிநேரத்தில் குறைந்தது. இதையடுத்து, யானை பாதுகாப்பாக நடந்து, மறுகரையில் ஏறி வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து வனச்சரக அதிகாரி முகமது ராபி கூறியதாவது
''கிராம மக்கள் தகவல் அளித்ததும் இங்கு வந்து பார்த்தோம். யானை தண்ணீர் குடிக்கிறது என்று முதலில் நினைத்தோம். ஆனால், யானை தனது துதிக்கையை வைத்து ஆற்றுநீரின் வேகத்தைக் கணித்துக் கொண்டிருந்தது. அதன்பின், வனத்துறை சார்பில் அணையின் கட்டுப்பாட்டு அதிகாரிகளையும், மின்வாரிய அதிகாரிகளையும் தொடர்புகொண்டு விவரங்களைக் கூறினோம்.
அவர்கள் அணையின் மதகுகளை மூடுவது மிகவும் ஆபத்தானது என்று கூறினார்கள்.ஒருவேளை யானை சென்றுவிட்டால், பிரச்சினையில்லை. இல்லாவிட்டால், ஒரு மணிநேரத்துக்குப் பின் அணையின் மதகுகளைத் திறக்கும்போது,வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு நீர் ஆற்றில் பாயும், இதனால் யானை வெள்ளத்தில் அடித்து செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.
மேலும், அணையின் மதகுகளை மூடினால், அரை மணிநேரத்துக்குப் பின்புதான் ஆற்றில் நீரோட்டம் குறையும் என்று தெரிவித்தனர். பலவிதமான தீவிர யோசனைக்குப் பின் அணையின் மதகுகள் இறக்கப்பட்டு ஒரு மணிநேரம் மூடப்பட்டது. ஆற்றில் படிப்படியாக நீர் குறைந்தவுடன் யானை மறுகரைக்குக் கடந்து சென்றது.
ஆற்றைக் கடந்து செல்லும் போது, யானை திரும்பிப் பார்த்து துதிக்கையை உயர்த்திப் பிளிறி தனது நன்றியுணர்வை காட்டியது.இதை பார்த்த கிராம மக்களும், அதிகாரிகளும் உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினர்.