WATCH VIDEO: ''மைதானத்தில் வீரருக்கு நேர்ந்த சோகம்''...மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 02, 2019 04:29 PM
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில்,தலையில் அடிபட்டு இலங்கை பேட்ஸ்மேன் திமுத் கருணா ரத்னே மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு இலங்கை அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கான்பெரேரா நகரில் நடந்து வருகிறது.முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் தனது ஆட்டத்தை தொடங்கியது. 2-வது நாளான இன்று தொடக்க ஆட்டக்காரர்கள் கருணா ரத்னே, திரிமானே ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
ஆட்டத்தின் 32-வது ஓவரை பாட் கம்மின்ஸ் வீச அதை கருணா ரத்னே எதிர்கொண்டார். அந்த ஓவரின் 4-வது பந்து பவுன்ஸராக எழும்ப,அதில் இருந்து தப்பிக்க தனது தலையை பின்பக்கமாகத் திருப்பி குனிய முயற்சித்தார் கருணா ரத்னே.ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் தோள் பட்டையில் பட்டு,பின்னர் தலைக்கும், கழுத்துப் பகுதியிலும் தெறித்தது.140 கி.மீ. வேகத்தில் வீசப்பட்ட பவுன்ஸர் அவரது ஹெல்மட்டையும் பதம் பார்த்தது.
இதனால் நிலை குலைந்து கீழே சரிந்த கருணா ரத்னேவை,பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஓடி வந்து தேற்றினார்கள்.உடனடியாக மைதானத்துக்கு வந்த இலங்கை, ஆஸ்திரேலிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தார்கள்.
இதையடுத்து ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டு செல்லப்பட்ட கருணா ரத்னே,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
— Mr Gentleman (@183_264) February 2, 2019