'கஜா புயல் மிகக்கடுமையாக இருக்கும்'..2015-ம் ஆண்டு போல கனமழை பெய்யும்!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 12, 2018 11:26 AM
வருகின்ற 15-ம் தேதி தமிழ்நாடு,புதுச்சேரி பகுதிகளில் கஜா புயல் கரையைக் கடக்கும்போது மிகக் கனமழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தை நோக்கி வரக்கூடிய கஜா புயல் மிகக்கடுமையாக இருக்கும்.கடலூர்-புதுச்சேரி இடையில் கரையைக் கடக்கும் இந்த புயலானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.
புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.
சென்னையில் எப்படி இருக்கும்?
கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு தரப்பட்டுள்ளது.
1. 2015-ம் ஆண்டு நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200மி.மீ மழை பதிவானது.
2. 2013-ம் ஆண்டு வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.
3. 2012-ம் ஆண்டு நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.
4. 2011-ம் ஆண்டு தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.
5. 2008-ம் ஆண்டு நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.
இந்தப் புயல் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தது. 1996-ம் ஆண்டு புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.
இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும்.சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம் தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது. ஆதலால் 16-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.