கும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 10, 2019 11:32 AM
காட்டுயானை சின்னத்தம்பி, கும்கி யானைகளான கலீம் மற்றும் மாரியப்பனை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சுற்றியுள்ள வனப்பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தியதாக கூறி காட்டுயானை சின்னதம்பியை டாப்-ஸ்லிப் என்கிற பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். பின்னர் மீண்டும் அங்கிருந்து உடுமைலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சின்னதம்பி நுழைந்தான். தகவல் அறிந்து உடனே வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் யானை சின்னதம்பியை காட்டிற்குள் விரட்டினர்.
ஆனாலும் யானை சின்னதம்பி காட்டிற்குள் செல்லாமல் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதாக ஊர்மக்கள் மீண்டும் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து யானை சின்னதம்பியை பிடிக்க கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கும்கி யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி காட்டுயானை சின்னத்தம்பியை பிடித்தனர். மேலும் யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றப் போவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தநிலையில், யானை சின்னதம்பியை கும்கியாக மாற்ற கூடது என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்தது.
இந்நிலையில் கண்ணாடிப்புதூர் என்கிற பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களை யானை சின்னதம்பி சேதப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் கும்கியானைகளான கலீம் மற்றும் மாரியப்பனுடன் யானை சின்னதம்பியை விரட்ட சென்றனர். ஆனால் விரட்ட வந்த கும்கியானைகளை தலை தெறிக்க ஓடவிட்டுள்ளது காட்டுயானை சின்னதம்பி. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.