கொடுக்கப்படும் வேலையை செய்ய தவறினால் பெல்ட் அடி, சிறுநீர் அருந்த வேண்டும்: நிறுவனத்தின் கெடுபிடி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 08, 2018 04:27 PM
ஒரு நிறுவனம் அல்லது ஸ்தாபனத்தின் கீழ் பணிபுரிவது என்பது, உடல் உழைப்பு, சுயமரியாதை, ஊழியரின் மாண்பு உட்பட வேலையில் அவர் காட்டும் அக்கறை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவை சேர்ந்தது. தான் பணிபுரியும் நிறுவனத்துக்கான விஸ்வாசத்தை தாண்டிய தார்மீக உழைப்பையே மனிதநேயமுள்ள பெருநிறுவன முதலாளிகள் விரும்புவார்கள். முன்னதாக இந்திய நிலப்பரப்பில், தமிழ்நாடு வரை விரவிக் கிடந்த நிலபிரபுத்துவ முதலாளிகளின் கீழ் வேலை பார்த்த பாமர மக்களுக்கும், அதன் பிறகு உருவான முதலாளித்துவ-தொழிலாளி வர்க்க முரண்பாடுகளுக்கும் இடையே கூட நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
ஜப்பானில் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு தூங்கும் அறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். மனிதவள ஆற்றலுக்கு உடலின் ஆரோக்கியமும், உடற்சக்தியும் முக்கியம் என்பதை உணர்ந்த நிறுவனங்களாக அவை போற்றப்பட்டன.
ஆனால் தற்போது சீனாவின் பெய்ஜிங்கில் வீடு பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம் தனது ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளைச் செய்ய தவறினால் மனித கழிவான சிறுநீரை அருந்த வேண்டும், கரப்பான் பூச்சிகளை உட்கொள்ள வேண்டும், தவறு செய்தால் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும், டாய்லெட்டில் தண்ணீரை குடிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியதாக பரவி வருவதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் லெதர் ஷூ அணியாவிட்டாலோ, கச்சிதமான உடையில் வராவிட்டாலோ, மேற்கண்ட தண்டனைகளை ஏற்க மறுத்தாலோ பெல்ட் அடி, சம்பள பிடித்தம், அபராதம் போன்றவையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேற்கூறிய தண்டனைகள் பிற ஊழியர்களின் முன்னில்லையில் நிகழ்வதால் பலரும் தன்மானம் கருதி வேலையை விட்டு செல்வதோடு, வேறு வழியின்றி அங்கேயே சுயமரியாதையை அடகுவைத்துவிட்டு பலர் பணிபுரியவும் செய்கின்றனர்.