11 பேர் தூக்கிட்டு தற்கொலை.. சிசிடிவி 'கேமராவில்' வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 04, 2018 11:44 PM
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.
மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து கைப்பற்றப்பட்ட சசிசிடிவி கேமராவில் இருந்து போலீசாருக்கு சில உண்மைகள் தெரியவந்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் தற்கொலை தான் செய்து கொண்டனர் என்னும் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்ததில் வெளிநபர்கள் யாரும் வீட்டுக்குள் இரவு 11.30 மணிவரை செல்லவில்லை. அப்படி இருக்கும் போது, இதில் இவர்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருடைய தூண்டுதலின் பெயரில் தற்கொலை செய்யவோ அல்லது கொலை செய்திருக்கவோ வாய்ப்பு இல்லை.
மேலும், தூக்குப்போடுவதற்காக அந்தக் குடும்பத்தில் உள்ள இரு பெண்கள் 5 நாற்காலிகளை எடுத்து வந்தது கேமராவில் தெரிகிறது. இந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் மீது ஏறித்தான் தூக்குப் போட்டுள்ளனர். தூக்குப்போட்ட இடத்தில் அந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடந்தன.ஆகவே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவை இந்தக் குடும்பத்தினர், முன்கூட்டியே திட்டமிட்டு, மன சம்மதத்துடன் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இறக்கும் முன், ஒரு ஹோட்டலில் இருந்து 20 ரொட்டிகளை வரவழைத்துள்ளனர். இந்தக் குடும்பத்தினருக்கு ரொட்டி சப்ளை செய்த இளைஞரிடமும் விசாரணை நடத்தினோம். அந்த இளைஞர், தான் ரொட்டி சப்ளை செய்யும் போது மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு தனக்கு பணத்தை அளித்தனர் என்று தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமராவில் இரவு 10 மணிக்கு அந்தக் குடும்பத்தில் உள்ள 2 பெண்கள் மாடியில் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துச் சென்றனர். 10.15 மணிக்கு அந்த வீட்டில் இருந்த துருவ், சிவம் ஆகிய இரு சிறுவர்களும் கையில் வயர் அல்லது நைலான் கயிறு போன்ற பொருட்களைக் கையில் எடுத்துச்சென்றனர்.
10.29 மணிக்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் ரொட்டி சப்ளை செய்ய வந்தார். அவரிடம் ரொட்டியை பெற்றுக்கொண்டு பணத்தைக் கொடுத்தனர்.
10.57 மணிக்கு அந்த வீட்டில் இருந்த புவனேஷ் என்பவர் கையில் நாயைப் பிடித்துக்கொண்டு வெளியே வாக்கிங் சென்றார். 11.04 மணிக்கு மீண்டும் நாயை அழைத்து வந்து மாடியில் கொண்டுபோய் நாயைக் கட்டுகிறார்கள்.
அதன்பின் அதாவது 11.10 மணிக்குப் பின் இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இந்த தற்கொலை இவர்கள் குடும்பத்தினர் விருப்பப்படியேதான் நடந்துள்ளது, வெளியாட்கள் இதில் ஈடுபடவில்லை என்பது சிசிடிவி கேமரா மூலம் தெரியவருகிறது,'' என போலீசார் தெரிவித்தனர்.