சென்னையில் பயங்கரம்: 300 டெலிகாலர்களை ஏமாற்றி, பொதுமக்களின் வங்கிக்கணக்கில் இருந்து கோடி கோடியாக சுருட்டிய கும்பல்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Feb 21, 2019 12:32 PM
சென்னையில் 10க்கும் மேற்பட்ட BPO அலுவலகங்களை நடத்தி 300 டெலி காலர்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாயை சுருட்டிய மோசடி கும்பலின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கடந்த ஒரு வருடமாக பலரது வங்கி கணக்குகளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் இருப்பு தொகை திருடப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 14-ம் தேதி 7 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான போலி ஏடிஎம் அட்டைகள், செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் பணம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளியாக வியாசர்பாடி ஜான்சன் என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி ஜான்சனிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் குறித்தும், இந்த மோசடி எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்தும் பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. டெலிகாலர்கள் தேவை என்று, வேலை வாய்ப்பு துண்டு அச்சடித்து நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, வடபழனி, அமைந்தகரை, ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர் வேளச்சேரி, கிண்டி, தரமணி ஆகிய இடங்களில் வெவ்வேறு பெயர்களில் BPO போன்ற அலுவலகத்தை நடத்தி வந்த இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று தாங்கள் வேலைக்கு அமர்த்திய 300 பேருக்கும் பின்னர் வகுப்பு எடுத்துள்ளனர்.
‘வணக்கம் சார்.. பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுறோம். வங்கியைவிட குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொடுக்க வேண்டுமா? என்று கேட்டு, கஸ்டமரை கடன் வாங்க தூண்ட வேண்டும். அப்படி அவர் கடன் வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டால், அவர் பற்றிய விவரங்களை கேட்பதோடு வங்கி கணக்கு விபரங்களையும், எவ்வளவு சம்பாதிக்கிறார்? மாதம் எந்த தேதியில் தவணை கட்டத் தயாராக இருக்கிறார் போன்ற விவரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.
இதன் மூலம் கஸ்டமரது கணக்கில் எப்போது சம்பளம் வரும் என்பதை அவர் மூலமே அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆறு மாதம் சரியாக கட்டினால், கூடுதலாக 50 சதவீத தொகையை கடனாக வழங்கப்படும், தேவையான ஆவணங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பினால் 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்று கஸ்டமரின் ஆசையை மேலும் தூண்டவேண்டும்.
கடன் வாங்கும் ஆசையில் ஆவணங்களை அனுப்பி வைக்கும்போது வாக்காளர் அடையாள அட்டையின் இருபக்க நகல், ஆதார் கார்டு இருபக்க நகல், பேன் கார்டு இருபக்க நகல், எந்த வங்கியில் இருப்பு உள்ளதோ அந்த வங்கி ஏடிஎம்மின் இருபக்க நகல் முதலியவற்றை வாங்கி, அந்த விபரங்களை வைத்து போலி ஏடிஎம் கார்டு தயாரித்து வைத்துக்கொண்டு அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதில் இந்த கும்பல் கைதேர்ந்தது. சில நேரங்களில் கடன் வாங்கும் நபர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கடன் தொகை வங்கிக் கணக்கில் வந்து விழப் போகிறது என்று ஆசைகாட்டி நைஸாக ஓடிபி எண்ணை பெற்று அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வாரிக் சுருட்டிக் கொள்வது இந்த மோசடிக் கும்பலின் வாடிக்கை.
அந்த வகையில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 500 பேரின் வங்கிக்கணக்கில் இருந்து 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை களவாடி உள்ளனர். 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டவரிடம், வங்கியில் இருப்பு தொகை குறைவாக உள்ளது என்று கூறி 11 லட்சம் ரூபாய் கடன் பெற்று வங்கி கணக்கில் செலுத்த வைத்துள்ளனர். ஆனால் அவர் செலுத்திய அடுத்த வினாடியே 11 லட்சம் ரூபாய் மோசடி கும்பலின் வங்கி கணக்கிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஏமாந்தவர்களின் ஆவணங்களை வைத்து, நூற்றுக்கணக்கான சிம் கார்டுகளை வாங்கி அதன்மூலம் தங்களிடம் டெலிகாலர்களாக வேலை பார்க்கும் பெண்களுக்கு வழங்கி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை தேடிவரும் காவல்துறையினர், ஜான்சன் கொடுத்த தகவலின் பேரில் கோடிக்கணக்கில் பணம் இருப்பு வைத்திருக்கும் மோசடிக் கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதால், இவை குறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரும் வேகம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.