அரசு மருத்துவமனை பிரசவங்களிலும் தொடரும் இழப்புகளா?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 23, 2018 01:12 PM
வீட்டில் முறையற்ற பயிற்சி பெற்றவர்கள் சுகப்பிரசவம் பார்ப்பதால் உண்டான விளைவுகளால் சமீபத்தில் உயிரிழப்புகள் நேர்ந்தன. இதனை அடுத்து பயிற்சி பெற்ற அரசு மருத்துவர்களும், அரசு செவிலியர்களுமே பிரசவம் பார்க்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர்களைச் சேர்ந்த கணவன்மார்கள் தத்தம் மனைவிகளுக்கு தாங்களே வெற்றிகரமாக சுகப்பிரசவம் பார்த்தது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் விழுப்புரம் அருகே, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, கழுதூர் அருகே உள்ள வேப்பூரைச் சேர்ந்த தேவகி பிரவசத்துக்காக சென்றுள்ளார். மகப்பேறுக்காக அதிகாலையிலேயே தேவகி சென்றபோது பனிக்குடம் உடைந்து குழந்தை சுகப்பிரவசத்துக்கு தயாராக இருந்துள்ளது. ஆனால் தகவல் அறிந்த செவிலியர்கள் உடனடியாக சிகிச்சைய அளிக்காமல் காலம் தாழ்த்தியதால் தேவகியின் குழந்தை இறந்ததாகவும், இதற்கு முழுமுதற்காரணமாய் இருந்த செவிலியர்களின் அலட்சியத்தால்தான் இந்த சோகம் உண்டானதாகவும் தேவகியின் தரப்பில் இருந்து குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு இந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவத்துக்கு வரும் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும், நோயாளிகள் வேறு வழியின்றி லஞ்சமும் கொடுத்து அலட்சியத்தையும் பொறுத்துக்கொண்டு மருத்துவம் பார்த்துக்கொண்டு செல்வதாகவும் தேவகியின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் இதை மறுத்துள்ளனர். எனினும் அண்மையில் திண்டுக்கல் வத்தலகுண்டிலும் இதேபோன்று செவிலியர்களின் அலட்சியத்தால் தாய், சேய் இருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.