வேடிக்கை பார்த்தவர்கள் மீது வீரத்தைக் காட்டிய சிறுத்தை.. விவேகமாய் செயல்பட்ட வனத்துறை!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 01, 2019 07:55 PM
சிறுத்தையை பிடிக்க முயற்சித்தபோது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை துரத்தி துரத்தி கடித்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரின் லிம்பா பகுதியில் ஒரு வீட்டினுள் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வலையை விரித்து வைத்தனர்.
இதனிடையே சிறுத்தை பிடிப்பதை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் அதிகமாக கூடினர். ஆனால் சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க முயற்சித்த போது வனத்துறையினர் விரித்து வைத்திருந்த வலையை தாண்டி சிறுத்தை தாவி வெளியே வந்துள்ளது. அப்போது வலையை பிடித்திருந்த ஒருவரின் மீது சிறுத்தை பாய்ந்து பின்னர் பொது மக்களைப் பார்த்தும் பாய்ந்து ஓடியுள்ளது.
இதனால் பயந்து நாலாபுறமும் மக்கள் ஓட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் பயந்து ஓடிய மக்கள் மீது பாய்ந்து சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 9 மணி நேரமாக சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி ஏற்றி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துள்ளனர். பின்னர் சிறுத்தையை சாஹர்புர் வனவிலங்கு பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டுசென்றுள்ளனர்.