தாமதமாக வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கொடுத்த ‘கொடூர’ தண்டனை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 28, 2018 09:14 PM
ஆந்திரா பள்ளி ஒன்றின் முதல்வர் வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவர்களுக்கு கொடுத்த தண்டனை தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆந்திராவில் சித்தூரைச் சேர்ந்த புங்கனூரில் உள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஓரு வீடியோவில் தனியார் பள்ளியின் முதல்வர் மாகாராஜன் நாயுடு என்பவர் வகுப்புக்கு காலதாமதமாக வந்த மாணவர்கள் மற்றும் வீட்டுப் பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக வெயிலில் கைகளை மேலே தூக்கிக்கொண்டு நிற்கவைத்து தண்டனை கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவினைப் பார்த்த ஐதராபாத்தைச் சேர்ந்த அச்சுதராவ், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில், ‘முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே பள்ளி குழந்தைகளை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய பள்ளி முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் ‘இதுகுறித்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மண்டல கல்வி அலுவலர் லீலாராணி இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், இந்த செய்கைகள் மாணவர்களின் மனநிலையை கெடுக்கும் என்றும் கூறியதோடு, இந்த விசாரணையை மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக கலெக்டருக்கு அனுப்பி சம்மந்தபட்ட பள்ளி முதல்வர் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தவிர பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மண்டல கல்வி அலுவலர் லீலாராணி போலிசில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் பள்ளி நடத்துவதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளார் மாவட்ட கலெக்டர் பிரத்யும்னா.