‘அப்படியெல்லாம் திறக்கக் கூடாது’.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ‘செக்’!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 25, 2019 10:52 AM

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரண்டாவது முறையாக அனுமதி தர மறுத்துள்ளது.

Again TNPCB denies the permission to open Sterlite plant

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் அதனை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவிப்பதாக, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராத தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மின்விநியோகம் வழங்குவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரண்டாவது முறையாக மீண்டும் மறுப்பு தெரிவித்ததோடு, ஆலையையை திறக்க வேண்டுமென்றால் பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags : #STERLITE #THOOTHUKUDI #TAMILNADU #TNPCB #SUPREMECOURT