சிறையில் நடிகர் 'மன்சூர் அலிகான்' உண்ணாவிரதம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 23, 2018 06:53 PM
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் இத்திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்தத்திட்டத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் இதுதொடர்பாக சேலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், "சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை அமைத்து பெரியளவில் கொள்ளையடிக்கப் பார்க்கின்றனர். இதற்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது,'' என பேசினார். இதனால் கடந்த 17-ம் தேதி சென்னையில் வைத்து மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
நேற்று, சேலம் மாவட்ட நீதிமன்றம், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்தநிலையில் சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று முதல் நடிகர் மன்சூர் அலிகான் சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.