'கேஸ் இன்னும் முடியல, தொடர்ந்து எழுதுவேன்': அன்றுமுதல் இன்றுவரை 'நக்கீரன்' கோபால்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 12, 2018 06:20 PM
சென்னை;அக்டோபர்12,2018: கல்லூரி மாணவிகளை தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச்சென்ற பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட இன்னும் சிலர் சிறை சென்ற வழக்கில் மேலும் சம்மந்தப்பட்ட புலனாய்வுகளை மேற்கொண்ட நக்கீரன் இதழின் குழுமம் ஆளுநர் வரை நூல்பிடித்துச் சென்று கட்டுரை எழுதி 6 மாதம் கழித்து ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து, ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்தது, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் கோபால் மீது தொடரப்பட்ட வழக்குக்கு காரணம்.
ராஜவிரோத குற்றச்சட்ட பிரிவு எண் 124:
இந்தியாவிலேயே முதல் முறையாக 124-வது எனும் ராஜவிரோதக் குற்றத்துக்கான சட்டப்பிரிவு பிரயோகப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர் நக்கீரன் கோபால். தமிழக ஆளுநர் பற்றிய அவதூறு கட்டுரை எழுதியதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆளுநரின் பணியைச் செய்ய விடாமல் தடுப்பது, ஆதாரமற்ற குற்றப்புகார்கள், ஊடக அத்துமீறல் என பலவகைகளில் ஆளுநர் மாளிகையின் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இருந்து விடுதலை ஆன பின்னரே நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கான விளக்கம் ஆளுநர் மாளிகையின் தரப்பில் இருந்து, ‘ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும், மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநரை பற்றி இஷ்டத்துக்கு எழுதுவது, பேசுவது ஏற்புடையதல்ல’ என்ற வகையில் பெரும் அறிக்கையாக வெளிவந்தது. ஆனால் ராஜகோபால் என்கிற நக்கீரன் கோபாலிடம் இருந்து வரும் சிம்பிளான பதில், பெரிய ஸ்மைல்தான். பெருத்த, ‘வீரப்ப’ மீசைக்கும், கனத்த குரலுக்கும் சொந்தமானவர். நக்கீரனுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான இதுபோன்ற போக்குகளைக் கண்டித்து ஏற்கனவே பொடா சட்டம் வரை கைது செய்யப்பட நேர்ந்ததாகவும் கூறுகிறார்.
ராஜகோபால் என்கிற நக்கீரன் கோபால்:
வலம்புரி ஜான் ஆசிரியராக இருந்த தாய் இதழ், அதன்பின் தராசு இதழ் உள்ளிட்டவற்றில் பணிபுரியத் தொடங்கி, பின்னர ‘நெற்றிக்கண் துறப்பினும் குற்றமே’ என நின்ற நக்கீரன் என்கிற பெயரை, அதற்கான உரிமையை க.சுப்புவிடம் இருந்து பெற்று தன், 1988 ஏப்ரல் 20-ல் வெளியான தங்கள் இதழுக்குச் சூட்டினார்.
துணிச்சலான செயல்கள்:
1993-94ம் ஆண்டுகளில் இன்றைய ஆன்மீகவாதி ஜத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவின் மனைவியார் தற்கொலை செய்துகொண்டதை மகரன் என்கிற நிரூபர் மூலம் ஆதாரப் பூர்வமாக பதிவு செய்திருந்தது நக்கீரன். இதேபோல் 2010-ம் ஆண்டும் நித்யானந்தா- தொடங்கி ஆட்டோ ஷங்கர் வழக்குவரை நேரடியாக எழுதும் பத்திரிகையாக நக்கீரன் நின்றது. நேரடி திமுக ஆதரவுடன் இயங்கும் பத்திரிகை என்றாலும், திமுக-வின் ஆட்சி காலத்திலேயே 22 வழக்குகளை நக்கீரன் கோபால் சந்தித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த வழக்குகள் நிலுவையில் இருந்த அதே நேரம் அன்றைய முதல்வர் கருணாநிதி, தனிப்பட்ட முறையில் தமிழக அரசின் ஊடக பிரதிநிதியாக வீரப்பனை சந்திக்குமாறு நக்கீரன் கோபாலையே அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நக்கீரன் கோபால் கைது 2018:
இந்த நிலையில்தான், கடந்த 9-ம் தேதி காலை, புனே செல்ல முற்பட்ட கோபால், விமான நிலையத்துக்கு திடீரென வந்த டி.சி உள்ளிட்ட 10 போலீசாரால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப் பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டிக்கிறார். அதுசமயம் வழக்கறிஞரும் மதிமுக தலைவருமான வைகோ, தர்ணா’வில் ஈடுபடவும் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
கைது பற்றி நக்கீரன் கோபால்:
ஆனால், ‘கையில் கத்தி வைத்துக்கொண்டு, நேருக்கு நேரான தாக்குதலை மேற்கொள்ளும்போதோ, ஒருவரின் கைகளை பிடித்துக்கொண்டு உடல் ரீதியாக கட்டுப்படுத்தியோ அல்லது மன ரீதியாக கட்டுக்குள் வைத்துக்கொண்டோ பணி செய்யவிடாமல் தடுத்தால் போடப்படும் சட்டமே, தன் மீது பயன்படுத்தப்பட்டது’ எனவும் ‘நான் ஆளுநரை நேரில் சந்தித்து பேசியதே இல்லை’ என்றும் கூறுகிறார். இதேபோல் ஆளுநர் தரப்பில் இருந்து வந்த அறிக்கையில், நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
’தொடர்ந்து எழுதுவேன்’:
பத்திரிகை அலுவலகத்துக்கு தீவைப்பு; ஆட்டோவில் வந்து அலுவலகத்தில் இருப்பவர்களை சரமாரியாக தாக்குதல்; பத்திரிகை அலுவலகத்தை முடக்குதல் உள்ளிட்ட பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி பிரான்ஸின் சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டபோது ஒட்டுமொத்த ஊடகங்களும் ஒன்று சேர்ந்ததுபோல், சமூகத்தின் குரலாக, பொதுவாழ்க்கையின் கண்ணாடியாக ஊடகங்கள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் நக்கீரன் கோபால் மென்மேலும் தொடர்ந்து எழுதுவேன் எனவும் கூறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.