வகுப்பில் மாணவன் ‘இவ்வாறு’ எழுதியதால் 5 பள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 14, 2018 04:51 PM
மாணவியிடம் மாணவன் காதலைச் சொன்னதால் மாணவியும், மாணவியுடன் பயிலும் மற்ற மாணவிகளும் எலிமருந்து உண்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள மலைவாழ் உறைவிடப் பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் காதலைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை வகுப்பறையில் அனைவரின் பார்வையில் படுமாறும் தான் அந்த மாணவியை காதலிப்பதாக எழுதி வைத்துள்ளான். இதனால் பள்ளி நிர்வாகம் மாணவரை, அவரது பெற்றோர் முன் கண்டித்துள்ளது. மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்தியுமுள்ளது.
எனினும் இதனைத் தாங்கிக்கொள்ளாமல், மன உளைச்சலில் மாணவி எலிமருந்து உண்டுவிட்டு, வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அடுத்தடுத்து 4 மாணவிகளும் எலிமருந்து உண்டு, வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.
உண்மையில் மாணவிகள் 5 பேரும் எலிமருந்து உண்டதற்கான காரணம் என்ன? முதல் மாணவியின் தற்கொலை முயற்சிக்கு, மாணவன் அவரிடம் காதல் சொன்ன விவகாரம்தான் காரணம் என்றால் மற்ற 4 மாணவிகளின் தற்கொலை முயற்சிகளுக்கு என்ன காரணம்? எல்லாருக்கும் இருந்த வெவ்வேறு மன உளைச்சல் காரணமாக ஒரே வழியை அனைவரும் பின்பற்றினார்களா என்பன போன்ற பல கோணங்களில், பள்ளி, பெற்றோர், மாணவத் தோழிகள் என பல தரப்புகளில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.