மண்புழுவா.. குமாரசாமியா.. எடியூரப்பாவா..? - வைரலான பள்ளி வினாத்தாள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Mar 29, 2019 05:47 PM
பெங்களூருவிலுள்ள பிரபல தனியார் பள்ளியின் எட்டாம் வகுப்புத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் முழு ஆண்டுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. அதில் எட்டாம் வகுப்பு கன்னட மொழித்தேர்வில் `விவசாயிகளின் நண்பன் யார்?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்காகக் கொடுக்கப்பட்ட பதில்களில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவா, தற்போதைய முதல்வர் குமாரசாமியா அல்லது மண்புழுவா ஆகிய மூன்று சாய்ஸ்கள் இடம்பெற்றிருந்தது.
விவசாயிகளின் நண்பன் மண்புழு என்பது தெரிந்த பதில் என்றாலும், மீதமுள்ள இரண்டு சாய்ஸ்களில் வேறு உயிரினம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால், இரண்டு மாபெரும் அரசியல் தலைவர்களின் பெயரை மண்புழுவுடன் சேர்த்தது கர்நாடாகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிந்தபின் வினாத்தாளைப் பார்த்த மாணவர்களின் பெற்றோரில் சிலர் அந்த வினாத்தாளைப் படம்பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப, உடனே வைரலாகிவிட்டது. அதன்பின்னரே இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த பள்ளி முதல்வர், வினாத்தாளைத் தயாரித்தவரை அழைத்து விசாரித்தப் பின், உடனே பணிநீக்கம் செய்துள்ளார். தேர்வுக்கு முன்னரே அந்த வினாத்தாள், பள்ளி நிர்வாகத்தினரின் பார்வைக்கு வராததால் இந்தத் தவறு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கான பரபரப்பான சூழல் நிலவி வருவதால் நெட்டிசன்கள், இந்த தேர்வு வினாத்தாளை அரசியலாக்கி விவாதித்தும், ஷேர் செய்தும் வருகின்றனர்.