எசக்குபிசக்காக சிக்கிய கொழுத்த எலி.. ‘மீட்புப் பணியில் ஈடுபட்ட 7 பேர்’!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Feb 28, 2019 12:41 PM
ஒரு எலியைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையில் இருந்து வந்த அதிகாரிகள் பட்ட பாடு ஜெர்மனியில் பெரும் கவனத்தைப் பெற்றதோடு, அந்த எலியை அவர்கள் பத்திரமாக மீட்டு, பலரிடையே பாராட்டையும் பெற்றுள்ளனர்.
ஜெர்மனியில் பென்ஷீம் என்கிற இடத்தில் ஒரு சாலையின் மேல் மூடிவைக்கப்பட்டிருந்த பாதாள மூடியில் உள்ள ஒரு சிறு துளையில் கொழுத்த எலி ஒன்று எசக்கு பிசக்காக சிக்கிக் கொண்டது. இதனைப் பார்த்த ஒரு பெண் அப்பகுதியில் உள்ள தீயணைப்புத் துறையினரிடம் தகவலாகக் கூறியுள்ளனர்.
உடனே தீயணைப்புத் துறையில் இருந்து வந்த 7 பேர், ஒன்றரை பவுண்டு எடையுடைய கொழுத்த எலியை மீட்பதற்காக வெகுநேரம் போராடினர். பின்னர் அந்த பாதாள மூடியை பெயர்த்து எடுத்த பின்னரே எலியின் பின்புறம் இருந்து உந்தித் தள்ளியதும் எலி முன்னோக்கி பாய்ந்து, தான் மாட்டிக்கொண்ட அந்த துளையில் இருந்து வெளியேறி குதித்து ஓடத் தொடங்கியுள்ளது.
3 நிமிடத்தில் 7 பேர் சேர்ந்து செய்த இந்த மிஷன் ஆபரேஷன் முடிந்த பிறகு பலரும் பாராட்டை தெரிவித்ததோடு எலியும் நாய்க்குட்டியைப் போல் ஒரு நல்ல பிராணி, அதைக் காப்பாற்றியதற்கு நன்றி என்றும் தெரிவித்தனர். இதுபற்றி பேசிய மீட்புப் படை அதிகாரி, ‘ஞாயிற்றுக் கிழமை இப்படி எலி மாட்டிக்கொண்டதால், எங்களால் நகராட்சி அலுவலர்களை அழைக்க முடியவில்லை. நாங்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் விலங்குகள் நலவாரியத்தின் கீழ் இந்த கொழுகொழு எலியை காப்பாற்றியுள்ளோம். காப்பாற்றியதும் அது ஓடிவிட்டது’ என்றார்.