'அவன் கூப்டா,உனக்கு எங்க போச்சு புத்தி?...மீண்டும்,மீண்டும் 'பெண்களை குற்றவாளியாக்கும் கேள்வி
Home > News Shots Columnsஅவன் கூப்டா,உனக்கு எங்க போச்சு புத்தி,யாருண்ணே தெரியாதவன் கூட நீ எப்படி போன? இதுபோன்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக எழுப்பப்படுவதை காண முடிகிறது.ஆனால் இந்த கேள்விகளை எழுப்புவோர் தங்களின் உண்மையான அடையாளத்தின் மூலமாக தான் எழுப்புகிறார்கள் என்றால் அது கேள்விக் குறியே?.இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீது ஏன் இது போன்ற வக்கிரமான கேள்விகள்?
என்ன நம்பிக்கையில் அந்த பெண் சென்றிருப்பாள் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.நேற்று பழகி இன்று நான் உன்னோடு வருகிறேன் என அவர்களோடு செல்வதற்கு,அந்த பெண்கள் என்ன குழந்தைகளா?.ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அப்படியானால் அந்த பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்கு அந்த பாதகர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.அதை நினைத்து பார்க்கையில் மனது வலிக்கிறது.ஒருவரது நம்பிக்கையை பெற்று அந்த நம்பிக்கைக்கு எதிரான வேலை செய்வது எவ்வளவு இழிவான செயல்.அதை தான் அந்த மனித மிருகங்கள் செய்திருக்கின்றன.
அப்படி இருக்கையில் உன்னை யாரு அவங்களை நம்பி போக சொன்னது என பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே கேள்விகளை திருப்புவது எவ்வளவு கேவலமான செயல்.நம்பிக்கை என்று ஒன்று இல்லையெனில் பெண்கள் வீட்டினுள் மட்டும் தான் இருக்க முடியும்.'அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற கூற்றை மீண்டும் மெய்யாக்க நினைக்கிறார்களா இவர்கள்?.
பெண்ணிடம் இருந்த நம்பிக்கையும்,அவர்களது பெற்றோரிடம் இருந்த நம்பிக்கையும் தான் பெண்களை பல உயரங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறது.இதில் அந்த பெண்களின் நம்பிக்கை மட்டுமல்ல. ஊரில் இருந்து பெண்ணை சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னோட பொண்ணு பாதுகாப்பாக தான் இருக்கு என நிம்மதியாக இருக்கும் அப்பாவின் நம்பிக்கை,அண்ணனின் நம்பிக்கை,தம்பியின் நம்பிக்கை.என்னை சுற்றியும் யாராவது ஒரு அண்ணனோ,தப்பியோ இருப்பார்கள் என்பது தான் அந்த பெண்ணின் நம்பிக்கையாக இருக்க முடியம்.
ஆனால் அந்த நம்பிக்கையை தான் நாம் இன்று கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறோம்.இன்று ஒரு சிறு பெண் குழந்தையை தூக்கி முத்தமிட முடியாமல் இருக்கும் சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து,ஒவ்வொரு ஆண்களும் வெட்கப்பட வேண்டும்.ஒரு ஆண் நிற்கையில் அவனை கடந்து செல்வதற்கு ஒரு பெண் அச்சப்படுவாள் எனில் அது இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து.
பெண்களே சமூகவலைத்தளங்களில் உங்களிடம் யாராவது நெருங்கி பழக நினைத்தால் சந்தேகபடுங்கள்.'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க போட்டோ நல்லா இருக்கு' என கமெண்ட்ஸ் அடிக்கும் நபர்களை உங்களிடம் நெருங்க விடாதீர்கள்.உங்களை குறித்த தனிப்பட்ட தகவல்களை சமூகவலைத்தளங்களில் இருக்கும் மூன்றாம் நபரிடம் தயவுசெய்து பகிராதீர்கள்.
பெற்றோர்களே ஆண் பிள்ளைகளையும் பெண்,பிள்ளைகளையும் சமமாக வளருங்கள்.அவர்கள் முன்பே ''நீ அண்ணன் சொல்வதை இல்லை தம்பி சொல்வதை மட்டும் தான் கேட்டு நடக்கணும்'' என்று அவர்களை மட்டம் தட்டாதீர்கள்.நீங்கள் அவ்வாறு செய்வீர்கள் என்றால்,எதிர்காலத்தில் நடக்கப்போகும் பிரச்சனை அங்கிருந்து தான் தொடங்குகிறது.'அப்பாக்களே' உங்கள் மகன் பெண்களை மதிப்பதற்கு நீங்களே முன்உதாரணமாக இருங்கள்.'அம்மாக்களே' உங்களின் அதீத அன்பு அவனை தவறான பாதைக்கு கொண்டு செல்ல நீங்களே காரணமாக அமைந்து விடாதீர்கள்.
நிர்வாணமாய் உன்னைப் படமெடுத்துவிட்டேன்,நான் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும் என மிரட்டும் காமுகர்களிடம் "முடியாது,உன்னால முடிந்ததை நீ பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு கடந்து செல்லும் வீரத்தை நாம் கற்று கொடுப்போம்.இனியும் நாணமும்,அச்சமும் மட்டும் தான் சொல்லி கொடுக்க போகிறோமா? அல்லது
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்ற வீரத்திற்கான உத்வேகத்தை நாம் சொல்லி கொடுக்க போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது.
Behindwoods is not responsible for the views of columnists.