இளம் வீரர் ருத்துராஜை தக்க வைத்துக் கொண்டுள்ள சிஎஸ்கே, அவருடன் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரை தொடக்க வீரராக களமிறக்க திட்டம் போட்டால், ஏல பட்டியலில் இடம் பிடித்துள்ள டேவிட் வார்னருக்கு கொக்கி போடலாம்.
கடந்த சீசனில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், அணி மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பதவியில் இருந்து தொடரின் பாதியில் நீக்கப்பட்டார். தொடர்ந்து, அணியிலும் இடம் பிடிக்காமல் போனார். இந்த விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இருந்த போதும், மனம் தளராத வார்னர், ஆஸ்திரேலியா அணிக்காக டி 20 உலக கோப்பைத் தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். ஆஷஸ் தொடரிலும், சில இன்னிங்ஸ்களில் அற்புதமாக ஆடியிருந்தார். தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டியுள்ள டேவிட் வார்னர், ஐபிஎல் ஏலத்திலும் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என தெரிகிறது.
நிதானமாக ரன் சேர்க்கும் வலதுகை பேட்ஸ்மேன் ருத்துராஜூடன், அதிரடி இடதுகை வீரர் டேவிட் வார்னர் இணைந்தால், நிச்சயம் சிஎஸ்கேவிற்கு மிகப் பெரிய அளவில் ஆதாயம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.